புதுடெல்லி: தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்கவரி 15 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக இந்திய அரசு குறைத்துள்ளதால் அவற்றின் விலைகள் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
உள்நாட்டில் சில்லறை விற்பனையை அதிகரிக்கவும் தங்கக் கடத்தலைக் குறைக்கவும் ஏதுவாக தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்திற்கான தேவை கூடும்போது, உலகளவில் அதன் விலை அதிகரிக்கிறது. இதற்குமுன் இல்லாத வகையில், இவ்வாண்டு தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டது.
ஆயினும், இது இறக்குமதியை அதிகரித்து, ஏற்கெனவே தடுமாறிவரும் இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் குறைத்துவிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, சுங்கவரி குறைப்பு அறிவிப்பின் எதிரொலியாக இந்தியாவில் தங்க விலை சற்றே குறைந்தது. பத்து கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.250 குறைந்து, ரூ.67,450க்கு விற்பனையானது. அதுபோல், பத்து கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.270 குறைந்து, ரூ.73,580க்கு விற்கப்பட்டது.

