புதுடெல்லி: இந்தியாவின் 2024-2025 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைக்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் ஒரு கோடி விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவர்.
எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்கப்படும். காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும். 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம் செய்யப்படும்.
பருவநிலையைத் தாக்குப்பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
விவசாயத் துறைகளில் மின்னிலக்கப் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ளன. கிசான் கடன் பற்று அட்டை 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். நாடு முழுவதும் 10 ஆயிரம் இயற்கை வேளாண் ஆய்வு நிலையங்கள் அமைக்கப்படும். இந்தியாவில் வேளாண் உற்பத்தியை பெருக்க புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு கவனம் செலுத்தவுள்ளதாக வரவுசெலவுத் திட்ட உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

