தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா பீகாரில் நிறைவேற்றம்

2 mins read
492c0db9-c1e1-446f-a95c-e39a6b15ec4b
இந்திய உச்ச நீதிமன்றம். - கோப்புப் படம்

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்ததால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், வினாத்தாள் கசிவுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் பீகார் பொதுத் தேர்வுகள் மசோதா மாநில சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்புவழி நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, தேர்வில் முறைகேடு செய்யும் மாணவர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க மசோதா வகைசெய்யும்.

இதற்கிடையே, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவை ரத்துசெய்ய உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த கோரிய வழக்கில், தேர்வில் நேர்மை பாதிக்கப்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதி இடைக்கால உத்தரவு வழங்கியது.

தேர்வு நடைமுறைகளின் நேர்மை திட்டமிட்டு மீறப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வர ஆதாரங்கள் இல்லை. மேலும், நீட் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட்டால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மாணவர் சேர்க்கை நடைமுறையிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. மறு தேர்வு கோரும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு உண்மையில் ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் நடந்தது என்பதை மத்திய புலனாய்வு அமைப்பு செவ்வாய்கிழமை உறுதிப்படுத்தியது. ஜூன் மாதம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு, அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக வினாத்தாள் கசிவை ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை.

நீட் தேர்வை நிரந்தர ரத்து செய்ய அடுத்தடுத்து கோரிக்கை

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துச் செய்யக் கோரி தமிழ்நாடு, கர்நாடகாவைத் தொடர்ந்து மேற்குவங்க சட்ட பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்