தனிநபர் வருவாயில் ரூ.3 லட்சம் வரை வருமான வரி இல்லை: நிர்மலா சீதாராமன்

2 mins read
98ae2f27-9d56-436e-9bb7-6deb703987b3
படம்: - பிக்சாபே

புதுடெல்லி: வருமான வரி நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் வருமான வரி செலுத்துவோரில் மூன்றில் இரண்டு பங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய வருமான வரி முறையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தனிநபர் ஆண்டு வருவாயில் ரூபாய் 3 லட்சம் வரை வருமான வரி இல்லை. அதேபோன்று, ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 விழுக்காடு வருமானவரி செலுத்த வேண்டும்.

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோர்கள் 15 விழுக்காடு வரி செலுத்த வேண்டும். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டுவோருக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர்கள் 30 விழுக்காடு வரி செலுத்த வேண்டும்.

2024-2025 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கூறியவாறு தெரிவித்தார்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. இது தற்போது ரத்து செய்யப்படுகிறது.

மேலும், விலக்குகள் எதுவும் இல்லாத நடைமுறையில் உள்ள புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ.7 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது.

அதேபோல், “ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்துக்கான பிடித்தம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் கிட்டத்தட்ட 4 கோடி சம்பளம் பெறும் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் ஆறு மாதங்களில் மறுஆய்வு செய்ய வரவுசெலவுத் திட்டம் முன்மொழிகிறது. வருமான வரி சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் வருமான வரிச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும்” என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், “அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதற்கு ஒரே வரி என்ற முறை அறிமுகம் செய்யப்படும். தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்படுவது இனி குற்றமாக கருதப்படாது. நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 விழுக்காடு குறுகிய மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்வருமான வரிநிதியமைச்சர்