தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிபா கிருமி பரவல்: கேரளாவில் 26,430 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு

2 mins read
3f450d53-c155-436c-a96c-681094b50a28
கேரளாவில் நிபா கிருமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சோதனையிடப்படுகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே டெங்கிக் காய்ச்சல், டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டுமின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்கள் பரவுகின்றன.

இந்த நிலையில் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ‘நிபா’ கிருமியால் பாதிக்கப்பட்டான்.

கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்தச் சிறுவன் இறந்தார்.

இந்நிலையில் ‘நிபா’ கிருமிப் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் கேரள சுகாதாரத்துறை களமிறங்கியது.

சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இருந்தாலும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிசோதனை முடிவு எதிர்மறையாகவே வந்துள்ளது.

‘நிபா’ கிருமிப் பாதிப்பு உள்ள இடங்களில் ஆய்வு செய்வதற்காக புனேயிலிருந்து வந்துள்ள தேசிய கிருமியியல் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையினான நிபுணர்கள் குழுவினர், வவ்வால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ‘நிபா’ கிருமிப் பரவலைத் தடுக்கும் விதமாக மாநில சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பரவல் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனக்காயம் ஊராட்சியில் 95 குழுக்களும், பாண்டிக்காடு ஊராட்சியில் 144 குழுக்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்த இரண்டு ஊராட்சிகளிலும் நேற்று 8,376 ஆயிரம் வீடுகளில் சுகாதாரப் பணியாளர்கள் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தினர்.

இதுவரை 26,430 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்