புதுடெல்லி: நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் என்று இந்திய அதிபர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
கடந்த 1999ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை, லடாக்கின் காா்கில் மாவட்டத்திலும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் இந்தியா, பாகிஸ்தான் இடையே போா் நடைபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி போரில் இந்தியா வெற்றிபெற்றது.
இந்த வெற்றியை நினைவுகூரும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த இந்திய வீரா்களுக்கு மரியாதை செலுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி காா்கில் வெற்றி நாள் அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் வெற்றி விழாவை லடாக் பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், 25ஆம் ஆண்டு காா்கில் வெற்றி நாளையொட்டி, இந்திய அதிபர் திரௌபதி முர்மு கார்கில் விஜய் திவாஸ் நாளில் ஆயுதப்படைகளுக்கு நன்றி கூறியதுடன் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கப் பதிவில், “நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்,” என்றார்.
1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது பாரத அன்னையைப் பாதுகாக்க மிக உயர்ந்த தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்து கௌரவித்தார். அவர்களின் தியாகமும் வீரமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று இந்திய அதிபர் கூறினார்.
இதற்கிடையே, கார்கில் போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை வீரவணக்கம் செலுத்தினார். ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார்.
முன்னதாக, பிரதமர் மோடி நேற்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவில், “கார்கில் விஜய் திவாஸ் இந்தியாவின் துணிச்சல் மிக்கவர்களின் வீரக் கதையை நம் கண்முன் கொண்டு வருகிறது. அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். இந்த சிறப்புமிக்க நாளில் இதயபூர்வமாக அவர்களுக்குத் தலை வணங்குகிறேன். வாழ்க இந்தியா,” என்று பதிவிட்டிருந்தார்.