திருவனந்தபுரம்: கேரளா இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலம். வனம் மற்றும் நீர்நிலை பரப்புகளை அதிகம் கொண்டிருக்கும் இந்த மாநிலத்தில் எங்கு பார்த்தாலும், கோடை காலத்தைத் தவிர மற்ற காலங்களில் அனைத்து இடங்களிலும் மரங்கள் பச்சை பசேலென்றே காணப்படும்.
பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டும். இதனால் பருவமழை காலங்களில் எப்போது மழை பெய்யும் என்பது தெரியாது எனபதால் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது மக்கள் குடையுடனே செல்வார்கள். அனைவரின் வீட்டிலும் ஏராளமான குடைகள் இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில் கடந்த 49 வருடங்களாக ஒரு நபர் குடையே பயன்படுத்தாமல் இருந்து வருகிறார். கனமழை கொட்டினாலும், கடும் வெயில் வாட்டி வதைத்தாலும் அவர் குடையைப் பயன்படுத்துவதில்லை. அவர் அவ்வாறு இருப்பதற்கு சுவாரஸ்யமான சம்பவம் அவரது வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
அந்த நபர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியை சேர்ந்த மேத்யூ. கூலித் தொழிலாளியான இவர் கனமழை கொட்டினாலும் நனைந்தபடிதான் செல்கிறார். கடும் வெயில் அடித்ததாலும் குடையைப் பயன்படுத்துவதில்லை.
49 ஆண்டுகளாக குடையைப் பயன்படுத்தாமல் இருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் கஷ்டப்பட்டு வாங்கிய குடைகள் தொலைந்து போனது உள்ளிட்ட விஷயங்களை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
“நான் கூலி வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி எல்சி எழுத்தறிவு வகுப்புகளைச் சொல்லிக் கொடுப்பவராக இருந்தார். அவர் வீட்டில் இருந்து வேலை விஷயமாக எங்கு சென்றாலும் குடை தேவைப்பட்டது. எனக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ஒரு குடை வாங்கக்கூட வழியின்றி தவித்தேன்.
“இருந்தபோதிலும் எனது மனைவிக்குக் குடை வாங்கி கொடுத்தேன். ஆனால் அவருக்கு வாங்கிக் கொடுக்கும் குடை எப்படியாவது தொலைந்துவிடும். மீண்டும் வாங்கி கொடுத்தாலும், அந்த குடையும் தொலைந்து கொண்டே இருந்தது. எனது மனைவிக்கு அவரது தந்தை கூட 2 குடைகள் வாங்கி கொடுத்தார். அந்த குடைகளும் திருடு போனது.
“ஒரு முறை அரிசி வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தில் மனைவிக்கு குடை வாங்கி கொடுத்தேன். அரிசி வாங்க வைத்திருந்த பணத்தில் குடை வாங்கி விட்டதால், ஒருநாள் நான் எனது கர்ப்பிணி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உருளைக் கிழங்கை வேகவைத்து சாப்பிட்டோம்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“மற்றொரு முறை வங்கியில் அடகு வைத்த மனைவியின் நகையைத் திருப்புவதற்கு ஏற்பாடு செய்த பணத்தில், மீதமிருந்த தொகையில் ஒரு குடை வாங்கினேன். இந்த இரு குடைகளுமே தொலைந்து விட்டன. 7 குடைகள் தொலைந்துபோன சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது.
“சாப்பாட்டுக்கு அரிசி வாங்கக்கூட கஷ்டப்பட்ட நேரத்திலும் மனைவிக்காக வாங்கிக்கொடுத்த குடைகள் அனைத்தும் தொலைந்தபடி இருந்தது எனக்கு கவலையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக “இனி குடையைப் பயன்படுத்த மாட்டேன்,” என்று சபதம் எடுத்தேன்.
“இந்நிலையில் எனது மனைவி எல்சி எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு எனது குழந்தைகளைப் பராமரிப்பதற்காக கிளாரம்மா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தேன். தற்போது அவருடன் வாழ்ந்து வரும் நிலையில், குடையைப் பயன்படுத்த மாட்டேன் என்று நான் எடுத்த சபதத்தை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறேன்,” என்று திரு மேத்யூ மேலும் கண்ணீர் மல்கக் கூறினார்.
கஷ்டப்பட்டு வாங்கிய குடைகள் திருட்டு போனதால் ஏற்பட்ட கவலை காரணமாக எடுத்த சபதத்தை மேத்யூ 49 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருவது மானந்தவாடி பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.