புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் நட்டா தகவல்

2 mins read
4aa0d772-565d-4c83-9875-b0344a460ceb
இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.3 விழுக்காடு அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கான மருத்துவமும் மருந்தும் மலிவு விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: மக்களவையில் புற்று நோயாளிகள் அதிகரிப்பு குறித்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலளித்துப் பேசினார்.

முன்னதாக பஞ்சாப் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங் பேசுகையில், பஞ்சாபில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார்.

உலகிலேயே அதிவேக வளர்ச்சி கண்டு வரும் நாடு இந்தியா என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படி எனில், மருந்துகளின் விலையைக் குறைப்பதைக் காட்டிலும் புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக ஏன் மருத்துவம் வழங்க முடியாது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ஜே.பி.நட்டா, “இந்தியா முழுவதும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.3 விழுக்காடு அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 15.5 லட்சம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இதில், ஆண்கள் பெரும்பாலும் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயாலும் பெண்கள் பலர் மார்பகப் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“அந்த நோய்க்காக 131 அத்தியவாசிய மருந்துப் பட்டியலில் உள்ள மருந்து வகைகள் மத்திய அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தப் பட்டியலிலும் இல்லாத 28 வகை கலவை மருந்துகளும் உள்ளன. அவற்றை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்துடன் சேர்ந்து அரசு அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தி வருகின்றன.

புற்று நோயாளிகளுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வழிவகைகளை அரசு நடவடிக்கை செய்து வருகிறது. இதனால் புற்றுநோயாளிகளுக்கு மருந்துச் செலவில் அதிகமாக மிச்சமாகிறது. அதேபோல் மருத்துவமும் அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஜே.பி.நட்டா கூறினார்.

சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு குறித்த இன்னொரு கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் நட்டா, இது குறித்து அரசாங்கம் அறிந்து வைத்துள்ளது. அதிகமான மருத்துவர்கள் இருக்கக்கூடிய வகையில் மருத்துவக் கல்லூரிகளின் விரிவாக்கம் நடந்து வருவதாகவும் கூறினார். எனவே, வருங்காலத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறையின்றி அனைவரும் சேவை வழங்க முடியும் என்று கூறினார்.

“மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது. அதனால் நாங்கள் எங்களால் முடிந்தவரை விரைவாகச் செல்ல முயற்சி செய்கிறோம், அதே நேரத்தில், மருத்துவம் மற்றும் மருத்துவர்களின் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் ,” என்று அவர் கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை இப்போது 731 ஆக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 51,348 ஆக இருந்தது. அது இப்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் நட்டா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்