பாட்னா: அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அதிகளவிலான நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று அம்மாநிலங்களில் பாஜக அரசுக்கு எதிராக பல இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சனிக்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதல் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் அமைச்சர்கள் பலர் புறக்கணித்துள்ளனர்.
இண்டியா கூட்டணியில் இருந்து ஒரே முதல்வராக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வெளிநடப்பு செய்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடம் கூட பேச வாய்ப்பளிக்கவில்லை என்றும் மேற்கு வங்காளத்திற்கு நிதி வேண்டும் என பேசிய போது மைக் செயலிழக்க வைக்கப்பட்டதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
நிதிஷ்குமாருக்குப் பதிலாக பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிதி ஆயோக் கூட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும், திட்டங்களை வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான இந்த ஆட்சிக்குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் உள்ளனர். நிதி ஆயோக்கின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.