தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சரத்பவார் பதிலடி: குஜராத்தில் இருந்து விரட்டப்பட்டவர்தான் அமித்ஷா

2 mins read
a6353808-9ff0-4bab-bf33-e82b9fe0a404
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார். - கோப்புப்படம்: ஊடகம்

மும்பை: ஜூலை 21ஆம் தேதி மகாராஷ்டிராவின் புனேவில் நடந்த பாஜக மாநாட்டில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “எதிர்க்கட்சியினர் ஊழல் குறித்து பேசுகிறார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் மன்னனாகத் திகழ்பவர் சரத் பவார் தான். இதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. இப்போது அவர்கள் எங்களைக் குற்றம்சாட்டுகிறார்கள். யாராவது ஒருவர் ஊழலை நிறுவனமயமாக்கி இருந்தால் சரத் பவார் அது நீங்கள் தான்,” என்று சாடியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், “ஊழல்வாதிகளின் தலைவன் என்று தன்னை அழைத்த அமித்ஷா, குஜராத் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் என்று கூறியுள்ளார். மேலும், ‘அவர் இன்றைக்கு உள்துறை அமைச்சர், அவரின் சொந்த மாநிலத்தில் இருந்து விலகி இருக்க உச்ச நீதிமன்றத்தால் எவ்வாறு நிர்பந்திக்கப்பட்டார்?” என்பதை சரத் பவார் நினைவு கூர்ந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார் கூறுகையில், “சில நாள்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டிலுள்ள ஊழல்வாதிகளுக்கு எல்லாம் தலைவன் என்று என்னை அழைத்திருந்தார். வேடிக்கை என்னவெனில், உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா குஜராத்தில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அந்த மாநிலத்தில் இருந்து வெளியேறும்படி உச்ச நீதிமன்றத்தால் நிர்பந்திக்கப்பட்டார்.

“பாஜக மூத்த தலைவர் அமித்ஷா, கடந்த 2010ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் 2014ஆம் ஆண்டு அவர் அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

“அன்றைக்கு குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் தான் இன்றைக்கு உள்துறை அமைச்சராக இருக்கிறார். எனவே, நாம் எங்கே செல்கிறோம் என்பது பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.

“இந்த நாடு யார் கையில் இருக்கிறதோ அவர்களால் வழிநடத்தப்படும் மக்கள் தவறான பாதையில் செல்ல நேரிடும். நாம் இது பற்றி சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் நாட்டை தவறான பாதைக்கு இட்டுச் சென்று விடுவார்கள் என்று நான் 100 விழுக்காடு நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்