சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேகநபரான சம்போ செந்தில் தேடப்பட்டுவரும் நிலையில், அவரது கூட்டாளியான கிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பியோடியதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக இதுவரை 5 வழக்குரைஞா்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டனர். இதில், ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான ரவுடி சம்போ செந்திலை 10 தனிப்படைகள் அமைத்து தேடியும் காவல்துறையினரிடம் அவர் சிக்காமல் தப்பித்து வருகிறார்.
வி.பி.என். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே தனது கூட்டாளிகளுடன் சம்போ செந்தில் பேசி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினந்தோறும் மதியம் கூட்டாளிகளுடன் பேசும் சம்போ செந்தில் வெளிநாட்டிலிருந்து அந்த நாட்டின் நேரத்தை ஒத்து பேசுகிறாரா என்ற ரீதியிலும் தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 20 பேரின் சொத்துகளை முடக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் கொலைக்காக பரிமாற்றப்பட்ட பணத்தையும் கணக்கிட்டு, வங்கிக் கணக்குகளை முடக்கவும், கொலைக்காக கொடுக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகளை முடக்கவும் காவல்துறையினர் முயற்சி எடுக்கப்படுகிறது.
கொலையாளிகளுக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக மயிலாப்பூரைச் சோ்ந்த வழக்குரைஞா் மலா்க்கொடி, மற்றொரு வழக்குரைஞா் ஹரிஹரன், அருளின் உறவினா் சதீஷ் ஆகிய 3 போ் கடந்த 16ஆம் தேதியும், கொலைக்கு நிதி உதவி செய்ததாக புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி அஞ்சலை கடந்த வாரமும் கைது செய்யப்பட்டனா். இவர்களது கைதுச் சம்பவம் கொலை வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் அண்மையில் வாங்கப்பட்ட சொத்துகளின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.