சென்னை: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி 2006 - 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை, கனிமவளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2 லட்சத்து 64,644 லோடு லாரி செம்மண் அள்ளியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதில் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40,600 இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் உட்பட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 2012ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட அமைச்சருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், கணக்கில் வராத பணம், வெளிநாட்டு நாணயங்கள் உட்பட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் பொன்முடியின் ரூ.42 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
தற்பொழுது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அமைச்சர், அவரது மகனான கவுதம சிகாமணி ஆகியோரின் ரூ.14.21 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை தற்பொழுது முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.