சிம்லா: மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டிவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருவது தெரிந்ததே.
இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா [Medical Device Park] அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திருப்பி அனுப்பியுள்ள இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசு, தங்கள் மாநிலத்தின் செலவிலேயே அதை அமைத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசானது தொழிற்பூங்கா அமைக்க இதுவரை ரூ.74.95 கோடி செலவிட்டுள்ளது. எனவே மாநிலத்தின் விருப்பப்படி, மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள ரூ.30 கோடியைத் திருப்பி அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்பூங்கா அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.350 கோடியாகும்.

