டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலி: மாணவர்கள் போராட்டம்

3 mins read
d309b8e0-c53b-423e-82e4-34c7cd6e59d1
போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: புதுடெல்லியில் ஐஏஎஸ் மையத்தில் 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலியானதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

தலைநகர் புதுடெல்லியில் கடந்த சில நாள்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நகரத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கனமழை காரணமாக ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைக்கு கீழ்த்தளத்தில் வெள்ளம் புகுந்தது. அப்போது அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் தஞ்சம் புகுந்த மாணவர்கள் சிலர் வெள்ளத்தில் சிக்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், உள்ளூர் காவல் துறையினர் ஆகியோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பயிற்சி மையத்தில் புகுந்த நீரை இயந்திரம் மூலம் உறிஞ்சு எடுக்கும் பணியில் இறங்கினர். தொடர் மீட்புப் பணியில் இரண்டு மாணவிகள் உள்பட மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் 3 சடலங்களையும் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்தளத்தில் 30 மாணவர்கள் இருந்தனர் என்றும் அதில் மூன்று பேர் சிக்கிக் கொண்டனர், மற்றவர்கள் தப்பினர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இச்சம்பவத்தைக் கண்டித்து சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த துணை காவல் ஆணையர் ஹர்சவர்தன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

இது குறித்து துணை காவல் ஆணையர் ஹர்சவர்தன் கூறுகையில், “சம்பவம் தொடர்பாக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எங்கள் தடயவியல் குழுக்கள் வந்துள்ளன. தடயவியல் சான்றுகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வலுவான வழக்கை பதிவு செய்து, இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிக்கிய சில மாணவர்கள் மீட்கப்பட்டு அவர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.

இந்நிலையின் பயிற்சி மையத்தில் 3 பேர் பலியான விவகாரத்தில் டெல்லி ஆம் ஆத்மி அரசை பாஜக மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா கடுமையாகச் சாடியுள்ளார். “டெல்லி மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி மற்றும் அவர்களின் அரசின் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

“வடிகால்கள் ஏன் தூர்வாரப்படவில்லை என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவார்களா,” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகரில் அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே, பொறுப்பற்ற தன்மையால் மக்கள் தங்களது உயிர்களை விலையாகக் கொடுத்து வருகின்றனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலியாகினர். இது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது.

“புதுடெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மைய கட்டடத்தின் கீழ்தளத்தில் வெள்ள நீரில் சிக்கி மாணவர்கள் பலியானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சில நாள்களுக்கு முன், மழையின்போது மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் பலியானார்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றால் சாமானிய குடிமக்கள் தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்து வருகின்றனர்.

“பாதுகாப்பாக மற்றும் வசதியாக வாழ்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை, மேலும் அது அரசாங்கத்தின் பொறுப்பாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்