செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் பரிசளித்த ராகுல் காந்தி

1 mins read
943e3e14-f4a1-4950-be64-9acd84a3a991
ராகுல் காந்தி பரிசளித்த தையல் இயந்திரத்தின் உதவியால் இனி நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 ஜோடி காலணிகளைத் தயாரிக்கப் போவதாக கூறுகிறார் கடைக்காரர் ராம்சேட். - படம்: ஊடகம்

சுல்தான்பூர்: கடந்த 2018ஆம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது, அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூரில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26ஆம் தேதி சுல்தான்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வந்திருந்தார்.

சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செருப்பு தைத்துவரும் தொழிலாளி ராம்சேட்டை அவரது சிறிய கடையில் சந்தித்துப் பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார். பின்னர் அவருக்கு உதவி செய்யப்போவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி, புதிய தையல் இயந்திரம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதனால், இனி கைகளில் செருப்புகளைத் தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சேட், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளைப் பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

கைகளால் ஒருநாளைக்கு என்னால் இரண்டு ஜோடி காலணிகளை மட்டுமே தயாரிக்க முடிந்தது. ராகுல் காந்தி கொடுத்த தையல் இயந்திரத்தின் உதவியுடன் என்னால் 8 முதல் 10 ஜோடி காலணிகளைத் தயாரிக்க முடியும் என்று ராம்சேட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்