புதுடெல்லி: லெஃப்டினென்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர், இந்திய ஆயுதப் படை மருத்துவச் சேவைப் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதப் படையின் மருத்துவமனைப் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநர், மேற்கு ஆகாயப்படைத் தளபத்தியத்தின் முதல் பெண் தலைமை மருத்துவ அதிகாரி ஆகிய பதவிகளில் பணியாற்றிய பெருமையும் அவரைச் சாரும்.
பிரயாக்ராஜ், லக்னோ ஆகிய இடங்களில் பள்ளிக் கல்வியைப் பயின்ற அவர், பின்னர் புனேயில் அமைந்துள்ள ஆயுதப் படை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
அங்குச் சிறந்த கல்வியாளராகத் தேர்ச்சி பெற்ற அவர், 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ மருத்துவச் சேவையில் இணைந்தார்.
லெஃப்டினென்ட் ஜெனரல் நாயர், குடும்பநல மருத்துவப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.
இஸ்ரேலியத் தற்காப்புப் படைகளிடம் ரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுவாயுதப் போர்கள் தொடர்பான பயிற்சியையும் சுவிட்சர்லாந்து ஆயுதப் படையிடம் ராணுவ மருத்துவ நெறிமுறைகளைப் பற்றிய பயிற்சியையும் அவர் பெற்றார்.
சிறந்த சேவைக்காக இந்திய அதிபரிடமிருந்து ‘விசிஷ்ட் சேவா விருதுப்’ பதக்கத்தையும் லெஃப்டினென்ட் ஜெனரல் நாயர் பெற்றுள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளில் இவரது குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் ஆயுதப் படையில் பணியாற்றி வருகின்றனர். இவரது கணவரும் ஓய்வுபெற்ற விமானப் படை உயரதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.


