வயநாடு: வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்கெனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும் என்பதை மத்திய அரசு தான் சொல்ல வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “இன்று அரசின் உயர்மட்ட கூட்டம் நடந்தது. அதன் பிறகு அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நிலச்சரிவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மீட்பதே எங்கள் கவனம். மீட்புப்பணியில் ராணுவத்தின் முயற்சியைப் பாராட்டுகிறேன்.
“நிலச்சரிவு உண்டான இடங்களில் மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பதற்கு இயந்திரங்களைக் கொண்டு வருவது கடினமாக இருந்தது. அதேபோல் ராணுவம் அமைத்து வரும் பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.
“சாலியாற்றில் அதிக சடலங்கள் கிடைத்துள்ளன. அதனால், சாலியாற்றில் தொடர்ந்து சடலங்களைத் தேடும்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதேநேரம், நிலச்சரிவில் மீட்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். முந்தைய பேரிடர்களில் நாங்கள் செய்தது போல், மக்களின் புனர்வாழ்வுக்கான பணிகள் விரைவில் செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “தொற்றுநோய் பரவுவதைத் தவிர்க்க வேண்டும். மனிதர்கள் மட்டுமின்றி, ஏராளமான விலங்குகளும் பேரிடரில் உயிரிழந்தன. அவற்றை எல்லாம் முறையாக புதைக்க வேண்டும். இதற்கு சில நாள்கள் ஆகும். எனவே, நிலச்சரிவு தொடர்பான மீட்புப்பணிகளை மேற்கொள்ள 4 அமைச்சர்கள், மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இங்கேயே இருப்பர். பேரிடரில், தங்களின் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று விளக்கினார்.
மாண்டோர் எண்ணிக்கை
இதற்கிடையே, வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
கட்டிமுடிக்கப்பட்ட பாலம்
முண்டக்கை பகுதியில் புதன்கிழமை பெய்த கனமழையால் ராணுவத்தினர் அமைத்து வந்த தற்காலிக இரும்புபாலத்தின் பணி கைவிடப்பட்டது. வியாழக்கிழமை மழை குறைந்துள்ளதை அடுத்து ராணுவம் மீண்டும் பாலத்தின் கட்டுமானப் பணியைத் தொடங்கிய நிலையில், தற்போது பாலம் முழுவதுமாகக் கட்டிமுடிக்கப்பட்டது. மெட்ராஸ் ரெஜின்மெண்ட்டை சேர்ந்த ராணுவ பொறியாளர்கள் உட்பட, 123 பேர் இணைந்து இந்த மேம்பாலத்தை அமைத்தனர்.
நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியை இணைக்க சாலைகள், பாலம் அனைத்தும் அடியோடு மண்ணில் புதைந்த நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு பாலம் முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இயற்கை பேரிடராக அறிவிக்க சசி தரூரும் கோரிக்கை
வயநாடு நிலச்சரிவுகளை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்குமாறு திருவனந்தபுரம் எம்.பி. சதி தரூர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். .
இதுதொடர்பாக ஷாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்த பேரழிவானது பல மரணங்களையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயுதப் படை, கடலோரக் காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட பிற முகமைகள் கூட்டாக ஒன்றிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
“நிலச்சரிவால் எண்ணற்ற பாதிப்பும், பலியும் ஏற்பட்டுள்ளன. எனவே வயநாட்டு மக்களுக்கு அனைத்துவிதமான ஆதரவையும் வழங்குவது மிகவும் முக்கியமானது. அதேசமயம், இந்தப் பேரழிவை ‘கடுமையான இயற்கையின் பேரழிவு’ என்று அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர்ப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (MPLADS) வழிகாட்டுதல்களில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.1 கோடி வரையிலான பணிகளைப் பரிந்துரைக்க அனுமதிக்கும் என்பதை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டிய திரு சசி தரூர், தமது கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி அமைச்சர் அமித்ஷாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.