புதுடெல்லி: இந்தியா உணவு உபரி நாடாக மாறிவிட்டதாகவும் உலகின் உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பிற்கான தீர்வுகளை அது கண்டுபிடித்துவருவதாகவும் அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி (படம்) கூறியுள்ளார்.
அனைத்துலக வேளாண் பொருளியலாளர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையில் அவர் அவ்வாறு கூறினார்.
32வது முறையாக நடைபெறும் இந்த மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாள் மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசினார்.
“65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை இங்கு மாநாடு நடத்தப்பட்டபோது, இந்தியா புதிதாகச் சுதந்திரமடைந்த நாடாக இருந்தது. அது நாட்டின் விவசாயம், உணவுப் பாதுகாப்பிற்குச் சவாலான நேரமாக இருந்தது,” என்று திரு மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.
“ஆனால், இன்று இந்தியா உணவு உற்பத்தியில் உபரி நாடாகத் திகழ்கிறது. தற்போது, பால், பருப்பு, மசாலாப் பொருள்கள் உற்பத்தியில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது.
“அதேபோல உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை, தேயிலை போன்றவற்றை உற்பத்தி செய்யும் உலகின் இரண்டாவது ஆகப் பெரிய நாடாக விளங்குகிறது.
“ஒரு காலத்தில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகிற்குக் கவலை அளிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியா உலகளாவிய உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்புக்கான தீர்வுகள் தொடர்பில் செயல்பட்டு வருகிறது,” என்று திரு மோடி கூறினார்.
மாநாட்டில் ஏறக்குறைய 70 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 பேராளர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பருவநிலை-மீள்திறன் கொண்ட புதிய 1,900 பயிர் ரகங்களை வழங்கியுள்ளது. மேலும் ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் இலக்கை எட்டுவதை நோக்கி நாடு முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி சுட்டினார்.
இந்த மாநாடு உலகளாவிய வேளாண் சவால்கள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது என்றும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கொள்கையில் நாட்டின் முன்னேற்றங்களை வெளிப்படுத்துகிறது என்றும் கூறப்பட்டது.
இந்தியாவின் பொருளியல் கொள்கைகள் வேளாண் தொழிலை மையமாகக் கொண்டவை என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இந்திய வேளாண் துறையில் 90 விழுக்காட்டு விவசாயிகள் மிகச் சிறிய நிலப்பரப்பின் உரிமையாளர்கள் என்று கூறிய அவர் ஆனால் அவர்கள்தான் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கான மிகப் பெரிய தூண்கள் என்றார்.
இந்தியாவில் உற்பத்தியாகும் சிறு தானியங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
அனைத்துலக வேளாண் பொருளியலாளர்கள் மாநாட்டின் இவ்வாண்டுக்கான கருப்பொருள் ‘நீடித்த நிலைத்தன்மை மிக்க வேளாண்-உணவு முறை நோக்கிய உருமாற்றம்’ என்பதாகும்.