ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் வங்க தேசத்தவர் குடியேறுவது அதிகரித்து வருகிறது. அதையடுத்து அங்கு மக்கள் தொகைக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் அங்கு முக்தி மோர்ச்சாவுக்கு தேர்தலில் அதிக வாக்குகள் விழலாம் என்று பாஜகவின் மூத்த தலைவரும் அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா அச்சம் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட்டில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவின் ஜார்க்கண்ட் தேர்தல் இணைப் பொறுப்பாளரான ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜாம்ஷெட்பூரில் தொண்டர்கள் இடையே சனிக்கிழமை (ஆக. 2) உரையாற்றினார். அப்போது அவர், “அசாம், மேற்கு வங்கம், திரிபுராவிற்கு அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை கட்டமைப்பு வேகமாக மாறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வங்க தேசத்தவர்களின் குடியேற்றம் தான் என்று தெரிவித்துள்ளார்.
வங்க தேசக் குறியேறிகளால், ஜார்க்கண்ட் மாநிலத்தின 20 சட்டமன்றத் தொகுதிகளில் ஊடுருவல்காரர்களின் விழுக்காடு 20%ல் இருந்து 48% ஆக உயர்ந்துள்ளது. வாக்கு வங்கி காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான மாநில அரசு இவ்விஷயத்தில் அமைதி காத்து வருகிறது.
“வங்க தேசத்தவர் ஜார்க்கண்ட்டில் குடியேறும் போக்கு தொடர்ந்தால், அவர்கள் சட்ட மன்றங்களில் அமரும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி மீது மக்களுக்குக் கடுமையான அதிருப்தி உள்ளது. ஜார்க்கண்டின் புகழ்பெற்ற கலாசாரம், பாரம்பரியம், அதன் ஆறுகள், காடுகள் மற்றும் நிலங்களைப் பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே,” என பாஜக தலைவர் சர்மா தெரிவித்தார்.
‘ஜார்க்கண்ட்டை பிளவுபடுத்த பாஜக முயற்சி’
அசாம் வெள்ளத்தைப் பற்றிப் பேசாமல் ஜார்க்கண்ட் மக்களிடம் பிளவு ஏற்படுத்தும் வெறுப்பு அரசியலைப் பேசுகிறது பாஜக என்று சாடியுள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென்.
அசாம் மாநில முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான ஹிமந்தா சர்மா, அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் சோரென்.
அசாமில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார். அந்த மாநிலத்திற்கு வெள்ள நிவாரணப் பொருள்களை ஜார்க்கண்ட் அனுப்பி வைத்தது. அதற்கு நன்றிக் கடனாக அவர் இங்கு வந்து சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் வெறுப்பு அரசியலைச் செய்து வருகிறார்.
அசாம் முதல்வர் சர்மா, அந்த மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட் எத்தனை இடங்களுக்குச் சென்றார் என்பதைப் பற்றித்தான் அவர் பேசியிருக்க வேண்டும். ஆனால், அதைவிட ஜார்க்கண்ட் மக்களிடம் பிளவு ஏற்படுத்தும் வெறுப்பு அரசியலைத்தான் அவர் முக்கியமானதாகக் கருதுகிறார் என்று ஜார்க்கண்ட் முதல்வர் சோரென் சாடியுள்ளார்.