ஒரு நாளில் ஒரு சுங்கச்சாவடி ஒரு கோடி ரூபாய்: 5 சுங்கச்சாவடிகளில் பணமழை

ஒரு நாளில் ஒரு சுங்கச்சாவடி ஒரு கோடி ரூபாய்: 5 சுங்கச்சாவடிகளில் பணமழை

2 mins read
1355ab73-28db-4a0c-bec9-93449d3b7e7a
நாட்டிலேயே ஆக அதிகமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 142 சுங்கச்சாவடிகள் உள்ளன. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் ஏறக்குறைய ஆயிரம் சுங்கச்சாவடிகள் இருந்தபோதிலும் அவற்றில் ஐந்து மட்டும் ஒவ்வொரு நாளும் சராசரியாக தலா ஒரு கோடி ரூபாய் வரை வசூலிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சுங்கச்சாவடிகள் அந்த அளவுக்குப் பெரும் பணத்தை ஒவ்வொரு நாளும் வசூலிக்கின்றன.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் தரவுகளின்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள பரதனா சுங்கச்சாவடி 2023 - 24ஆம் நிதியாண்டில் ரூ.475.65 கோடி வசூலித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இது வசூலித்த தொகை ரூ.2,043.80 கோடி. இதுதான் நாட்டிலேயே அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடி என்று அறியப்படுகிறது.

அடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூர் சுங்கச்சாவடி. இங்கு கடந்த நிதியாண்டில் ரூ.429.65 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுதான் இரண்டாவது அதிகபட்ச வசூல்.

மூன்றாவது இடத்தில் ரூ.4,026 கோடியுடன் ஹரியானா மாநிலத்தின் கரோண்டாவும் 4வது இடத்தில் ரூ.364 கோடியுடன் மேற்கு வங்கத்தின் சுங்கச் சாவடியும் ஐந்தாவது இடத்தில் ரூ.364 கோடியுடன் உத்தரப்பிரதேச மாநில சுங்கச் சாவடியும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஐந்து சுங்கச்சாவடிகள் ஒவ்வொன்றும் வசூலித்த தொகை சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

2019 - 20க்கும் 2023-24க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நாடு முழுவதும் இவ்வாறு வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் ரூ.1.94 லட்சம் கோடி.

இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் சேர்த்து 983 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை, அதாவது 457 சுங்கச்சாவடிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டவை.

அதிகபட்சமாக சுங்கச் சாவடிகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது ராஜஸ்தான். இங்கு மட்டும் 142 சுங்கச் சாவடிகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்