வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. ராணுவம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், கைப்பேசியின் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள்.
நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் 200க்கும் மேற்பட்டோரை இன்னும் கண்டறிய முடியவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஆறாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாண்டோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்த நிலையில், இதுவரை 148 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மேலும், 81 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலச்சரிவால் முண்டக்கையில் மட்டும் 540 வீடுகள் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களை சேர்ந்த 2,597 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டது.
எட்டு மணி நேரம் போராடி பழங்குடியின குடும்பத்தை மீட்ட அதிகாரிகள்
தண்ணீர் நிறைந்த குகையில் உணவு இல்லாமலும் எங்கும் செல்ல முடியாமலும் பட்டினியால் தவித்த பழங்குடியின குடும்பத்தை எட்டு மணி நேரம் போராடி வனத்துறைக் குழு மீட்டது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அட்டமலைக்கு அருகில் உள்ள சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு குகையில் அக்குடும்பம் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து வயதுக்குட்பட்ட 4 குழந்தைகள் இருக்கும் அந்தக் குடும்பத்தை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக அட்டமலையில் உள்ள வனத்துறை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மனித இனத்தைக் காத்த மிருக இனம்
நிலச்சரிவில் எல்லாம் சரிந்து விழுந்த அந்த இரவில், ஒரு காட்டு யானை தெய்வமாக வந்து தங்களைக் காப்பாற்றியதாக நிலச்சரிவில் இருந்து தன் குடும்பம் உயிர்பிழைத்த சம்பவத்தைத் திகைப்போடு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் திருவாட்டி சுஜாதா தெரிவித்தார்.
“கடல் போல வெள்ளம் வந்தது. நான் வெளியே பார்த்தபோது, எனது பக்கத்து வீட்டுக்காரரின் இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்து கொண்டிருந்தது. அதில் எங்கள் வீடும் நாசமானது. நான் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த என் பேத்தியை வெளியே இழுத்து ஒரு துணியால் மூடி, வெள்ளத்தில் நீந்த ஆரம்பித்தேன்,” என்றார் திருவாட்டி சுஜாதா.
தன்னுடைய மகன், மருமகள், பேரன் ஆகியோர் மற்றொரு வீட்டில் வசித்ததாகவும் அவர்களை தன் மகன் மீட்டதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் அனைவரும் ஒரு காப்பி தோட்டத்தின் வழியாக சென்றபோது, காட்டு யானை ஒன்று அவர்களின் பாதையைக் குறுக்கிட்டது. அதனிடம், தயவு செய்து எங்களை எதுவும் செய்யாதே, என்று கெஞ்சியதாகவும் அதன் அருகில் மேலும் இரண்டு யானைகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“அந்த யானையின் கண்கள் கலங்கியதை நான் பார்த்தேன். அது விடியும் வரை அசையாமல் அங்கேயே நின்றது, அதன் கால்களுக்கு அடியில் நாங்கள் இருந்தோம்,”என நடந்ததை திருவாட்டி சுஜாதா விவரித்தார்.
அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

