புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் முறைகேடு செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளதாக கூறினார்.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விகிதத்தை முதலில் கூறியதற்கும் பின்னர் அளித்த இறுதி புள்ளிவிவரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7 விழுக்காடு வித்தியாசம் உள்ளது என ‘வோட் பார் டெமாக்ரசி’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, பாஜக வெற்றி பெற்ற 79 தொகுதிகளை அந்த ஆய்வறிக்கையில் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் முறைகேடு செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவின் ஆரம்ப மற்றும் இறுதி தரவுகளில் ஒரு விழுக்காடு வித்தியாசம் மட்டுமே இருந்தது. எனவே, இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்,”எனத் திரு சந்தீப் தீக்ஷித் செய்தியாளர்களிடம் கூறினார்.

