பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிரவாராவின் கல்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பீமண்ணா (60) ஈரம்மா (54) தம்பதியர். இவர்களுக்கு மல்லம்மா (23), பார்வதி (16), ஆகிய இரண்டு மகள்களும் மல்லேஷ் (19) என்ற மகனும் இருந்தனர். இவர்கள், ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு வீட்டில் சமைத்த ஆட்டிறைச்சி குழம்பும் சப்பாத்தியையும் சாப்பிட்டுவிட்டு உறங்கினர்.
இந்நிலையில், சிறிது நேரத்தில் இவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி ஆகிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. அவர்கள் ராய்ச்சூரின் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த பீமண்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது மனைவி, மகள் பார்வதி, மகன் மல்லேஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். மற்றொரு மகள் மல்லம்மா, கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
இதுகுறித்து ராய்ச்சூர் மாவட்ட ஆட்சியர் நிதீஷ் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், இவர்கள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை இருப்பது தெரிந்தது. அதன் மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். குடும்பப் பிரச்சினையால் இவர்கள் உணவில் விஷம் கலந்து, தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது,” என அவர் தெரிவித்தார்.