பெங்களூரு: கர்நாடகாவில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஒருவர், பேனாவைத் திருடியதாகக் கூறி ஆசிரியரால் அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டு ரயில் நிலையத்தில் பிச்சையெடுக்க வைத்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் இயங்கி வரும் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் தங்கி, தருண் குமார் எனும் சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில், பேனாவைத் திருடியதாக சக மாணவர்கள் தருண்மீது குற்றம் சாட்டியுள்ளனர். உடனே, ஆசிரம பொறுப்பாளர் வேணுகோபாலும் ஆசிரமத்தில் பணிபுரிபவர்களும் தருணின் கை கால்களைக் கட்டி 3 நாள்கள் ஓர் அறையில் அடைத்து வைத்துள்ளனர். அச்சிறுவனை விறகுக் கட்டையால் தொடர்ந்து தாக்கியுள்ளனர்.
பின்னர், யாக்திர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அங்கு அச்சிறுவனைப் பிச்சையெடுக்க வைத்தனர்.
சிறுவனின் தாய் மகன்களை பார்க்க பள்ளிக்கு வந்த போது அங்குப் படிக்கும் தருணின் மூத்த சகோதரன் மூலம் இந்த விஷயத்தை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். குழந்தைகள் நல செயல்பாட்டாளர் மூலம் சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.