கோல்கத்தா: மேற்கு வங்கத்தின் உணவு வகைகளில் உருளைக்கிழங்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிரியாணியில் கூட உருளைக்கிழங்கு சேர்க்கப்படும் ஒரே நகரம் கோல்கத்தாதான். அப்படிப்பட்ட உருளைக்கிழங்கால் இந்தியாவின் இரு மாநிலங்களின் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தின் அண்டை மாநிலங்களான ஒடிசா, அசாம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்படும் உருளைக்கிழங்கு சரக்குகளுக்கு அம்மாநில அரசாங்கம் தடை விதித்ததே இதற்கு முக்கிய காரணம். இந்தத் தடை கடந்த 15 நாட்களாக அமலில் உள்ளது.
மேற்கு வங்கத்தில் குறிப்பாக கோல்கத்தாவில் உருளைக்கிழங்கு விலை விண்ணைத் தொடத் தொடங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு கூறுகிறது.
இந்த முடிவால் ஒடிசா, அசாம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் மேற்கு வங்காள மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டன.
இதனால், அந்த மாநிலங்களிலும் உருளைக்கிழங்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இம்மாதம் 2ஆம் தேதி ஒடிசா அரசு, அதன் தலைமைச் செயலகத்தில் வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி, உருளைக்கிழங்கு விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியது.
தற்போது உருளைக்கிழங்கு கிலோ 35 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்று இந்தக் கூட்டத்தில் ஒடிசா உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பாத்ரா கூறினார்.
ஒடிசா இனி ஒருபோதும் மேற்கு வங்கத்திலிருந்து உருளைக்கிழங்கை வாங்காது என்று கூட்டத்திற்குப் பிறகு திரு பாத்ரா அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “மேற்கு வங்கத்தில் இருந்து உருளைக்கிழங்கு வாங்குவதை முற்றிலுமாக நிறுத்த விரும்புகிறோம், படிப்படியாக உத்தரப் பிரதேசத்திலிருந்தே கொள்முதல் செய்யும் திட்டத்தை உருவாக்குவோம்” என்று பிடிஐ செய்தி முகமையிடம் அவர் கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலம் உருளைக்கிழங்கிற்கு மேற்கு வங்கத்தையும் வெங்காயத்திற்கு மகாராஷ்டிராவையும் முழுமையாக நம்பியிருக்கிறது. இந்தியாவிலேயே உருளைக்கிழங்கு உற்பத்தியில் இரண்டாம் இடம் விகிக்கும் மேற்கு வங்கத்திலேயே அதன் விலை விண்ணைத் தொடத் தொடங்கியதால் தான் மாநிலத்திற்கு வெளியே உருளைக்கிழங்கை அனுப்புவதற்கு அரசு தடை செய்துள்ளது என்று மேற்கு வங்க வேளாண் அமைச்சர் பைச்சாராம் மான்னா, பிபிசியிடம் தெரிவித்தார்.
“ இங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுவதால் அரசின் மீது கேள்விகள் எழ ஆரம்பித்தன. எனவே உள்ளூர் சில்லறை சந்தையில் உருளைக்கிழங்கு விலையை கட்டுப்படுத்தும் வரை மாநிலத்திற்கு வெளியே விற்பனை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று முடிவு செய்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அம்மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகளில் உள்ள உருளைக்கிழங்கு மழை காரணமாக அழுகும் நிலை ஏற்பட்டால், மொத்த வியாபாரிகளுக்கு நிச்சயம் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

