தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷில் இருக்கும் இந்திய விசா நிலையங்கள் காலவரையறை இன்றி மூடல்

1 mins read
e131fbb6-c0f0-4625-8b9c-5b1ba5f14579
போக்குவரத்து அதிகம் இன்றி காணப்படும் டாக்காவின் மையப்பகுதி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பங்ளாதேஷில் இருக்கும் இந்திய விசா நிலையங்கள் அனைத்தும் காலவரையறை இன்றி மூடப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பங்ளாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, உள்நாட்டுப் போராட்டம் மற்றும் கலவரம் காரணமாக ஆகஸ்ட் 5ஆம் தேதி அப்பதிவியிலிருந்து விலகினார்.

தன் நாட்டைவிட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

பாதுகாப்பு கருதி பங்ளாதேஷில் உள்ள இந்தியர்களில் பலர் முன்கூட்டியே நாடு திரும்பினர்.

தற்போது அங்கு கிட்டத்தட்ட 19 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாகவும் அவர்களில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் இந்தியத் தூதரகம் இயங்கி வருகிறது. சிட்டகாங், ராஜ்ஷஹி, குல்னா, சில்ஹெட் ஆகிய நகரங்களில் துணைத் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனினும், பாதுகாப்பு கருதி தூதரகம், துணைத் தூதரகங்களில் இருந்து அத்தியாவசியமற்ற ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், பங்ளாதேஷில் இருக்கும் இந்திய விசா நிலையங்கள் அனைத்தும் காலவரையறை இன்றி மூடுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இணையவாசலில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “நிலையற்ற சூழ்நிலை காரணமாக, அனைத்து இந்திய விசா மையங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். அடுத்த விண்ணப்ப தேதி குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். அடுத்த வேலை நாளில் கடப்பிதழைப் பெற்றுக்கொள்ளலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்