சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் ஸ்ரீகந்த் அருகே ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்ரீகண்ட் அருகே நேற்று இரவு சமேஜ் மற்றும் பாகி பாலங்கள் அருகே மேகம் வெடித்ததில் 45 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத் தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் இந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்திற்கு நன்கு தயார் நிலையில் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படாமல் இருக்க இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தொலைதூர இடங்களுக்கு அக்குழுக்கள் அனுப்பப்பட்டன. இமாச்சலில் நடந்த இந்த மேக வெடிப்பு ஒரு பெரிய பேரழிவு. வியாழக்கிழமை காலை வரை 13 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் மாயமான 10 பேரைத் தேடும் பணி நடந்து வருகிறது,” எனத் தெரிவித்தார்.
அம்மாநிலத்தில் இருக்கும் மண்டி மாவட்டத்தில் உள்ள ஜோகிந்தர் நகரில் 110 மி.மீ., மழை பதிவாகியுள்ளது எனவும் சிர்மூர் மாவட்டத்தில், அதிக மழை பெய்துள்ளது எனவும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. காணாமற்போனவர்களைத் தேடும்பணி 10வது நாளாக தொடர்ந்து நடந்துவரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக ஆகஸ்ட் 10ஆம் தேதி வயநாடு வருகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.