மணிஷ் சிசோடியாவுக்கு நிபந்தனையுடனான பிணை

1 mins read
55f9f6a5-9a07-4f67-b490-01e5c4e66af3
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா. - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைப்பதாக ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தெரிவித்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) சிசோடியாவின் பிணை மனு குறித்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். அதில், அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் மணிஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை பிணை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரவாதத் தொகையாக ரூ. 10 லட்சம் செலுத்த வேண்டும்; அவர் தனது கடப்பிதழை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்; ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும்; சாட்சியங்களைக் கலைக்கக்கூடாது எனும் நிபந்தனைகளின் அடிப்படையில் சிசோடியாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அதே ஆண்டு மார்ச் 9ஆம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. இதன் காரணமாக மணிஷ் சிசோடியா சுமார் 17 மாதங்களாக சிறையில் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்