புதுடெல்லி: மாநிலங்களவையில் தங்களுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமை அவை நடவடிக்கையின்போது, எதிர்க்கட்சிகளுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
“காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை, ஆளும் கட்சியினர் அவரை தவறான முறையில் பேசுகின்றனர். அவருக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை,” என்று காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் கூறினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளியே வந்த சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன் செய்தியாளர்களுடன் பேசுகையில், “எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது ஒலிவாங்கி அணைக்கப்படுகிறது. பெண் எம்.பி.க்களுக்கு மரியாதை வழங்கப்படவில்லை. இதற்கு அவைத் தலைவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்,” என்றார்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க மறுத்ததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவையில் தனக்குப் போதிய ஆதரவு இல்லை என்று கூறி அவைத் தலைவர் ஜகதீப் தன்கரும் சிறிது நேரம் அவையில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

