மதிய உணவில் இறந்துகிடந்த பல்லி: 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு

மதிய உணவில் இறந்துகிடந்த பல்லி: 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு

2 mins read
45da9aab-5643-4a7f-a34d-61c018732ae1
உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். - படம்: இந்திய ஊடகம்

பாலசோர்: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தை அடுத்த சிராபூரில் உதய் நாராயணன் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

வியாழக்கிழமை மதியம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதம் மற்றும் கறி வழங்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் சாப்பிடத் தொடங்கிய நிலையில், ஒரு மாணவர் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்தார். உடனே அந்த உணவைச் சாப்பிட வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மதிய உணவைச் சாப்பிட்ட மாணவர்கள் அனைவரும் சிராபூரில் உள்ள சோரோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் கூறும் போது, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெறும் என்றும் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட 80 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்