புதுடெல்லி: தனது காதலிக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக தன் தாயாரின் தங்க நகையைத் திருடிய 9ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியைச் சேர்ந்த தன் காதலிக்கு அவருடைய பிறந்த நாளன்று ஐபோன் ஒன்றைப் பரிசளிக்க அந்த மாணவன் விரும்பினான். இதற்காக அந்த மாணவன், தனது தாயாரின் தங்க காதணி, தங்க மோதிரம், தங்கச் சங்கிலி ஆகியவற்றைத் திருடினார்.
பின்னர், அதை அம்மாநிலத்தில் இருக்கும் கக்ரோலா பகுதியில் உள்ள நகைக் கடைகளில் விற்று, அந்தப் பெண்ணுக்கு ஐபோனை வாங்கிக் கொடுத்தார்.
இந்நிலையில், தனது தங்க நகைகள் காணாமல் போனதை அறிந்த அந்த மாணவனின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த மாணவன் திருடியதை ஒப்புக் கொண்டார்.
பின்னர் அவர் வாங்கிக் கொடுத்த ஆப்பிள் ஐபோனும் மீட்கப்பட்டது. தன் காதலிக்குத் தன்மீது நல்ல அபிப்ராயம் ஏற்படுத்துவதற்காக, அந்த மாணவன் ஐபோன் வாங்கித் தர விரும்பியுள்ளார். அதற்காக, அவர் தனது தாயிடம் பணம் தருமாறு கேட்டார். ஆனால், அவர்களிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லாத காரணத்தால் அவரால் அதைத் தர இயலவில்லை. மேலும், தற்போது இது தேவையில்லை, படிப்பில் கவனம் செலுத்தினால் போதுமானது என அவரது தாயார் அந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனால் கோபமடைந்த அந்த மாணவர், நகையைத் திருட முடிவு செய்தார் என காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், அந்த மாணவனிடம் இருந்து தங்க நகையைப் பெற்ற கமல் வர்மா என்ற 40 வயதான நகைக் கடைக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.