தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷ் சிறையிலிருந்து தப்பிய 1,200 கைதிகள் இந்தியாவிற்குள் நுழையலாம் என எச்சரிக்கை

2 mins read
2a06b174-bb55-4c25-af0a-63d0544014e9
இந்தியாவுக்குள் நுழையும் முயற்சியில் பங்ளாதேஷ் நாட்டவர்கள் வெள்ளிக்கிழமை கூச் பெஹாரில் உள்ள சிடல்குச்சியில் உள்ள பங்ளாதேஷ் - இந்திய எல்லையில் கூடினர். - படம்: பிடிஐ

புதுடெல்லி: பங்ளாதேஷ் சிறைகளில் இருந்து தப்பிய 1,200 கைதிகள் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பங்ளாதேசில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியதால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகினார். மேலும், அவர் தற்காலிகமாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்த வன்முறையின்போது, பங்ளாதேஷிலுள்ள ஐந்து சிறைகளில் இருந்த கைதிகளும் போராட்டக்காரர்களும்வெளியேற்றப்பட்டனர்.

நர்சிங்கி சிறையிலிருந்து தப்பியவர்களில் 400 கைதிகள் மட்டும் சரணடைந்துள்ளனர். ஜமாத்-இ-இஸ்லாமி, ஹெபாசத்-இ-இஸ்லாம் ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் சரணடையவில்லை.

இவர்களில் பலர் தாங்கள் பதுக்கிவைத்துள்ள ஆயுதங்களை விற்க இந்தியாவுக்குள் நுழையலாம் என எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பங்ளாதேஷில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் பலரும் பணியில் இல்லை. மேலும், அவர்கள் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், தைதிகள்மீது இருக்கும் வழக்குகளுக்கு பயந்து அவர்கள் இந்தியாவுக்குள் நுழையலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் இருவர் போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை சோதனைச்சாவடியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்தனர்.

மேலும், அக்கட்சியைச் சேர்ந்த பலரும் பாதுகாப்புக்காக இந்தியாவுக்குள் நுழைய முயலலாம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பங்ளாதேஷிய மக்கள் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற நான்கு சம்பவங்கள் நடைபெற்றன.

மாணவர்கள் போராட்டம் காரணமாக இந்திய - பங்ளாதேஷிய எல்லையில் இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 4,096 கி.மீ. நீளமுள்ள இந்திய - பங்ளாதேஷிய எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வீரர்கள் போதிய அளவில் இல்லை. எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட முள்வேலிகளில் பல இடங்கள் ஓட்டையாகவும் சில பகுதிகளில் நீர்நிலைகள் இருப்பதாலும் அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், பங்ளாதேஷைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆற்றில் இறங்கி இந்தியாவுக்குள் நுழையத் தயாராக நிற்கும் காணொளி தற்போது பரவலாகி வருகிறது. இந்திய - பங்ளாதேஷிய எல்லையில் நடக்கும் ஊடுருவலைத் தடுக்கும் பணிகளைக் கண்காணிக்க ஐவர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சு உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்