கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு சைக்கிள், புத்தாடைகளை வழங்கினர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்ற ஆய்வுப் பணிகளுக்குச் சென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு சைக்கிள், புத்தாடைகள் வழங்கி மகிழ்வித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட, முதன்மை நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், குற்றவியல் விரைவு நீதிமன்றம் என 11 நீதிமன்றங்கள் உள்ளன.
இந்த நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான என்.ஆனந்த் வெங்கடேஷ், எஸ்.சவுந்தர் இருவரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9ஆம் தேதி) அன்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியும் கலந்துகொண்டார்.
ஆய்வுப் பணிகளுக்குப் பின் கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
கள்ளச் சாராயம் குடித்து சுரேஷ்-வடிவுக்கரசி தம்பதியினர் மரணமடைந்தனர். இதனால் அவர்களது 3 குழந்தைகளும் அனாதைகளாயினர். அவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் உதவ முன்வந்தனர்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சவுந்தர் இருவர் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் சைக்கிள் வழங்கி உதவினர்.