கோல்கத்தா: கோல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பெண் மருத்துவர்ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு படித்த 31 வயதான அந்த மாணவி, ஆகஸ்ட் 6ஆம் தேதி, இரவு உணவை சாப்பிட தாமதமாகச் சென்றதாகவும் மறுநாள் காலை அவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது பிறப்புறப்பு, முகம், உதடு, கழுத்து, வயிறு, கைகள் ஆகியவற்றில் காயங்கள் இருந்தன. இதனால், அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. அந்த மாணவியின் உடலை மூன்று மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். அதில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபருக்கும் மருத்துவ கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆனால் அவர் உள்ளே எளிதாக சென்று வர அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே மேற்கு வங்க மாநில முதல்வரான மம்தா பானர்ஜி, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.