வயநாடு: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவின் வயநாடு மாவட்ட பகுதிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி ( சனிக்கிழமை) ஆய்வு செய்தார்.
சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் அவர் வான்வழி ஆய்வு மேற்கொண்டார். நிலச்சரிவை அடுத்து பெருக்கெடுத்து ஓடிய இருவழிஞ்சி ஆற்றையும் அவர் பார்வையிட்டார். அப்போது, ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது.
பிரதமருடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடன் சென்றனர்.
சூரல்மலை பகுதியில் இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலம் வழியாக நடந்து சென்ற பிரதமர் மோடி நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்த்தார்.
பின்னர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து நிலச்சரிவு தொடர்பாக வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. “வயநாடு நிலச்சரிவு ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவை சிதைத்துவிட்டது. நிலச்சரிவு ஏற்பட்டது முதல், ஒவ்வொரு பணிகளையும் கண்காணித்து வந்தேன். நிலச்சரிவு பாதிப்புகளை தொடர்ந்து கேரள அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன,” எனக் கூட்டத்தில் பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், “நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்திற்கு நாம்தான் பொறுப்பு. கேரளாவிற்கு தேவையான உதவிகள் விரைவில் வழங்கப்படும்,” என்றார் அவர்.
‘தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது’
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என விளக்கமளித்திருந்தார். இந்த விளக்கத்தை மேற்கோள்காட்டி, தற்போது வயநாடு நிலச்சரிவையும் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
குடும்பங்களுக்கு நிதியுதவி
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. வருவாய் ஆதாரங்களை இழந்துள்ள குடும்பங்களில் பெரியவர்களுக்கு (18 வயதுக்கு மேல்) நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி அதிகபட்சம் 30 நாள்களுக்கு வழங்கப்படும். இந்த நிதி உதவி 18 வயது முடிந்த 2 பேர் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, நிவாரணப் பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என கேரள அரசின் அமைச்சரவை குழு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.