பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாஜக, மஜத கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் இரண்டு பேர் சித்தராமையாவுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக, மஜத கட்சித் தொண்டர்கள் சித்தராமையாவைப் பதவி விலகக் கோரி மைசூரு நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஒரு நிலத்திற்காக 14 வீட்டு மனைகள்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது மைசூரு நகர மேம்பாட்டு கழகம் (எம்யுடிஏ). ஆனால், அதற்கு மாற்றாக 14 வீட்டு மனைகளை அவருக்கு வழங்கியுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட மனைகளின் மதிப்பு, கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட பன்மடங்கு அதிகம் என்று பாஜக கூட்டணிக் கட்சிகள் குறை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் குமாரசாமியும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் பாஜகவின் பாதயாத்திரையில் கூட்டாக பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ‘‘முதல்வர் சித்தராமையா ஊழலில் ஈடுபட்டிருப்பது 100 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி தனது மனைவிக்குச் சாதகமாக நடந்துகொண்டுள்ளார். அவர் நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் உடனடியாக தனது முதல்வர் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும்,’‘ எனக் கூறியுள்ளார்.
பதவி விலகும் வரை போராட்டம்
பின்னர் எடியூரப்பா பேசுகையில், ‘‘பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையம், பட்டியலினத்தவர் மேம்பாட்டு நிதி, நிலம் ஒதுக்கீடு ஆகியவற்றில் சித்தராமையா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரித்தால் அவர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதனாலேயே வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற மறுக்கிறார்.
சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகும் வரை பாஜக, மஜதவின் போராட்டம் தொடரும். அவரை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் மீது ஊழல் புகார் கூறுகிறார். அவருக்கு துணிவு இருந்தால் பதவி விலகிவிட்டு தேர்தலைச் சந்திக்கட்டும். மக்களின் வரிப் பணத்தையும் சொத்தையும் அபகரித்த அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்,’‘ என்றார்.
சந்தர்ப்பவாதிகள்
இதற்குப் பதிலளித்த முதல்வர் சித்தராமையா, ‘‘முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றவர். அவருக்கு என்னைப் பற்றி விமர்சிக்க துளியும் தகுதியில்லை. குமாரசாமி, எடியூரப்பா ஆகிய இருவருமே சந்தர்ப்பவாதிகள். என்னை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதற்காக இப்போது கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
எடியூரப்பாவும் பாஜகவினரும் கன்னட மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள். அதனையும் மீறி அவர்கள் வென்றால்கூட அவர் எதிர்பார்க்கும் முதல் பதவியை கட்சித் தலைமை கொடுக்காது,” என்றார்.