தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்க தீர்மானம்

1 mins read
அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு
03279a49-7bf7-472d-bf6f-fbbd457c65bd
வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை எதிர்க்க வலியுறுத்துவது என இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரிய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: வக்ஃபு சட்டத்திருத்த மசோதா பற்றி ஆய்வு செய்ய 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவைச் சந்தித்து விளக்கம் அளிக்க அனைத்து இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர் மௌலானா பசுலூர் ரஹ்மான் முஹத்திதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தலைவர் மௌலானா காலித் சைபுல்லா ரஹ்மானி தலைமையில் முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் வாரியத்தின் சட்ட நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்க வலியுறுத்துவது என்று ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சட்டத் திருத்தம் ஏற்புடையதல்ல என்று அரசியல் தலைவர்களைச் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. அத்துடன் அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று மௌலானா பசுலூர் ரஹ்மான் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னோர்களின் பாரம்பரியத்தை முஸ்லிம்கள் பாதுகாக்க வேண்டும், வக்ஃபு சொத்துகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பள்ளிவாசல்களின் இமாம்கள் வக்ஃபு குறித்து முஸ்லிம்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்