தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘இந்தியாவின் நண்பர் ஷேக் ஹசினா, அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் முகமது யூனுஸ்’

2 mins read
8a5f9bff-8708-4783-8c9c-4a6a5e4edec1
இந்தியாவின் நண்பரை (ஷேக் ஹசினா) பாதுகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. சஷி தருர் கூறியுள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் நண்பர் ஷேக் ஹசினா, அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் முகமது யூனுஸ் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தருர் கூறியுள்ளார்.

அண்டை பங்ளாதேஷ் நாட்டில் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களால் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.

இதையடுத்து பங்ளாதேஷில் நோபெல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில் பங்ளாதேஷில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து காங்கிரஸ் எம்.பி. சஷி தருர் பேட்டியளித்தார்.

அதில், “முகமது யூனுஸ் குறித்து எனக்கு தெரியும். அவர் பாகிஸ்தானைவிட அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பவர். தற்போது பங்ளாதேஷில் பதவியேற்றுள்ள இடைக்கால அரசை பார்க்கையில், நமக்கு விரோதமான நாடுகளை (பாகிஸ்தான் , சீனா) குறித்து இந்தியா கவலை கொள்வதற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

“ஷேக் ஹசினா இந்தியாவின் நண்பர். உங்களின் நண்பர் ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு உதவ வேண்டும். இந்தியாவும் அதைத்தான் செய்தது. இந்த விவகாரத்தில் நான் இந்திய அரசை பாராட்டுகிறேன். இன்னும் எவ்வளவு நாள்கள் ஷேக் ஹசினா இந்தியாவில் இருப்பார் என்று சொல்லமுடியாது. உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளியை நீங்கள் எப்போது கிளம்புகிறீர்கள் என்று நாம் கேட்கக்கூடாது.

“பங்ளாதேஷில் உள்ள இந்துக்கள் சில இடங்களில் தாக்கப்படுகிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர் என்பது உண்மை.

“பங்ளாதேஷில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்,” என்று சஷி தருர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்