புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது. அந்தக் கைது நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி பிணை வழங்கியது.
இந்நிலையில், அதே முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டிக்கக்கோரி சிபிஐ, ஜூலை 29ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.
இந்நிலையில், சிபிஐயின் கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து கெஜ்ரிவால் ,டெல்லி உயர் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர மனுவாகப் பரிசீலித்து விசாரிக்குமாறு அவருடைய வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.