புதுடெல்லி: இந்தியாவில் `பெண்கள் மற்றும் ஆண்கள் 2023’ என்ற தலைப்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் 2036ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப் படுவதாகவும், 2011ல் பெண்கள் விகிதம் 48.5 விழுக்காடாக இருந்த நிலையில், 2036ல் 48.8 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, இந்தியாவில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் என பாலின விகிதம் இருந்தது. இது 2036ஆம் ஆண்டில் ஆயிரத்திற்கு 952 ஆக உயரும் எனவும், இது பாலின சமத்துவத்திற்கான நேர்மறை குறியீட்டைக் காட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வயதிற்குட்பட்ட தனி நபர்களின் விகிதம் 2011 முதல் 2036 வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கருவுறுதல் குறைவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த காலகட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை கருவுறுதல் விழுக்காடு 20-24 வயதில் 135.40லிருந்து 113.6 ஆக குறைந்துள்ளது. 25-29 வயதில் 166லிருந்து 139.6 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் 35-39 வயதில் கருவுறுதல் விகிதம் 32.7 விழுக்காட்டிலிருந்து இருந்து 35.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.