புதுடெல்லி: சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (ஆகஸ்ட் 14ஆம் தேதி) அன்று உத்தரவிட்டது.
பெண் காவலர், மற்ற அதிகாரிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கோவை இணைய குற்றக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீது சென்னை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த சவுக்கு சங்கர், ஒவ்வொரு வழக்கிலுமாக பிணை பெற்றார். இதற்கிடையே, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி, அவரது தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீதுள்ள பிற வழக்குகளில் பிணை பெறத் தேவையில்லை எனில், விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, தன் மீதுள்ள அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்குமாறு சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான காவல் துறையினர், குண்டர் சட்டத்தில் மீண்டும் வழக்குப் பதிவு செய்தனர். இது சவுக்கு சங்கர் தரப்பினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்நிலையில், சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கிய பிறகும், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு தலைமை நீதிபதியே நேரடியாக கேள்வி எழுப்பினார்.
மேலும், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் ஆணை பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.