கோல்கத்தா பெண் மருத்துவர் கொலை: நள்ளிரவில் மருத்துவமனையைச் சூறையாடிய கும்பல்

2 mins read
cb700933-b859-49c3-89ec-33fd4b15a68c
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து காவல்துறையினரையும் போராட்டக்காரர்களையும் தாக்கிய கும்பல். - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கோல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற 31 வயது பெண் மருத்துவர், ஆகஸ்ட் 9ம் தேதி காலை மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது உடற்கூராய்வு பரிசோதனையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த 33 வயது தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலையைக் கண்டித்து இந்தியா முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மருத்துவமனைகளில் வெளிநோயாளி சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்கம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், பொது இடங்களைப் பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்றவும் பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற வழக்குகளில் நீதியை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

அப்போது ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலர் மருத்துவர்கள் உட்பட போராட்டக்காரர்களை தாக்கி, காவல்துறை வாகனங்களைச் சேதப்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மர்ம கும்பல் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கட்டடத்திற்குள் நுழையவும் முயன்றதாக அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த மருத்துவர்களில் ஒருவரான சுபேந்து முல்லிக், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், அந்த மர்ம கும்பல் தாக்கியதால் என்ன செய்வதென்றே தெரியாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடியதாகவும் அவர் கூறினார்.

மருத்துவமனையின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு காவல்துறை வாகனங்களையும் அவர்கள் கற்களை வீசி தாக்கினர் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக அந்த நாளிதழ் தெரிவித்தது.

முன்னதாக, சிபிஐ குழு மருத்துவமனைக்குச் சென்று இந்த கொடூர கொலை குறித்து விசாரணையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்