தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை: மோடி

2 mins read
fa2e331d-2c06-436d-b2f9-029a8adf104d
140 கோடி இந்தியர்களும் ஒன்று சேர்ந்து தீவிரமாக உழைத்தால் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாகும் எனத தனது தேசிய தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவின் 78வது சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து 11வது முறையாக அவர் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், திரு மோடி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை சமன் செய்தார்.

“சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திர போராட்ட வீரர்களை போல நாமும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்,” எனத் தன் தேசிய தின உரையில் மோடி குறிப்பிட்டார்.

மேலும்,“வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்பு வருத்தம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். இயற்கை பேரிடர்களால் உறவை இழந்தவர்களுக்கு தேச மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள்.

“இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டும். 140 கோடி இந்தியர்களும் ஒன்று சேர்ந்து தீவிரமாக உழைத்தால் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாகும். உலக பொருளாதாரத்தில் 3வது பெரிய பொருளியல் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

 “2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த வேண்டுமென்பது நமது மக்களின் கனவு. இந்த நேரத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நம் வீரர், வீராங்கனைகளை வாழ்த்துகிறேன். அனைத்துலக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன,” என்றார் மோடி.

“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை அளிக்கிறது. அது தொடர்பாக விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். மேலும் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம்,” என அண்மையில் கோல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தைக் குறிப்பிடாமல் அவர் தெரிவித்தார்.

“அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவக் கல்வி பயில்வதற்கான இடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் நம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டிய அவசியம் இருக்காது. அடிக்கடி நடத்தப்படும் தேர்தல் காரணமாக தேசத்தின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகின்றன. அதை கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை அரசியல் கட்சிகள் ஆதரிக்க வேண்டும்,” எனப் பிரதமர் மோடி தனது உரையில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்