மூன்றாவது பெரிய பொருளியலாக இந்தியா உருவெடுக்கும்: ஐஎம்எஃப்

1 mins read
aae756ae-226b-408a-8fb5-3cbb43aa4389
அனைத்துலகப் பண நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மத்திய அரசு கணித்ததைக் கட்டிலும் இந்தியப் பொருளியல் அதிகரிக்கும் என்று ஐஎம்எஃப் எனப்படும் அனைத்துலகப் பண நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி பல்வேறு காரணிகளால் உந்தப்பட்டு, எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது என்று அவர் இந்தியா டுடே சிறப்பு நேர்காணலில் கூறினார்.

“கடந்த நிதியாண்டில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட, இந்தியாவின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது.

“2023ஆம் ஆண்டு எங்கள் கணிப்பின் விளைவுகள், இந்த ஆண்டிற்கான கணிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

“இந்தியாவின் கிராமப்புறங்களிலும் நுகர்வு நிலைகள் மறுமலர்ச்சி பெற்றுள்ளது. இது நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.

“எஃப்எம்சிஜி, இருசக்கர வாகன விற்பனைக்கான புதிய தரவு, சாதகமான பருவமழை ஆகியவற்றின் அடிப்படையில் 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7 விழுக்காடாக உயரும் எனக் கணித்துள்ளோம்.

“மத்திய அரசு மேற்கொண்ட பொருளியல் ஆய்வு 6.5 விழுக்காடு பொருளியல் வளர்ச்சி இருக்கும் என்று கணித்துள்ளது.

“ஆயினும் அதைவிடக் கூடுதல் வளர்ச்சி இருக்கும் என்பதே எங்களது முன்னுரைப்பு.

“2027ஆம் ஆண்டு இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளியலாக மாறும் என அனைத்துலகப் பண நிதியம் கணித்துள்ளது’’ என்று டாக்டர் கீதா கோபிநாத் கூறினார்.

குறிப்புச் சொற்கள்