அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் பணியாற்றும் இந்தியர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவர்களின் நலன் கருதி புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்மூலம் பல இந்தியர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர். அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தின் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் வாழும் இந்தியர்களின் நலன் தொடர்பாக முழு அக்கறை செலுத்தி வருகிறோம். பொதுவாக இங்குள்ள நிறுவனங்களில் பணியில் உள்ளபோது ஏற்படும் இறப்புக்கும் காயமுற்றோருக்கும் மட்டுமே குறைந்த அளவில் காப்புறுதி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
“இதனைச் சற்று மாற்றி அமைக்கும் விதமாக இங்குள்ள காப்புறுதி நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இந்தியர்களுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“வாழ்வுப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், பணியின்போது இறப்பு என்பதைக் காட்டிலும் இயற்கை மரணத்திற்கும் காப்புறுதித் தொகையை வழங்க வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்தியர்களுக்கான வேலை விசா வழங்கும்போதே அந்தக் காப்புறுதித் திட்டம் சேர்த்துக்கொள்ளப்படும்.
விபத்திலோ, இயற்கையாகவோ மரணம் ஏற்பட்டால் உடலைத் திரும்பப்பெறும் நேரத்தில், உடனடியாக இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. உலக அளவில் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குச் செல்வோரில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர்.
இந்தியத் தூதரகத் தகவலின்படி ஐக்கிய அரபு சிற்றரசுகளில் 3.5 மில்லியன் பேர் வசிக்கின்றனர். தற்போது அது 4 மில்லியனாக உயர்ந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அதில் தொழில் நிறுவனங்களிலும் ஆலைகளிலும் தொழிலாளர்களாகப் பணியாற்றுபவர்கள் 65 விழுக்காட்டினர்.
சென்ற 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, புலம்பெயர்ந்த இந்தியர்களில் 1,750 பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

