பாட்னா: 1,710 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலத்தின் ஒரு பகுதி சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) இடிந்து விழுந்தது .கடந்த மூன்று ஆண்டுகளில் கம்பிவடப் பாலம் தொடர்பான மூன்றாவது சம்பவம் இது. ககாரியா மாவட்ட நீதிபதி அமித் குமார் பாண்டே பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “காலை 8 மணியளவில் அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலத்தின் ஒன்பது மற்றும் 10 வது தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை,” எனத் தெரிவித்தார். இந்த ஆண்டு ஜூன் 18 ஆம் தேதிக்குப் பிறகு பதிவான பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் இது 12வது சம்பவமாகும். ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் கங்கை ஆற்றின்மீது உள்ள இந்த குறிப்பிட்ட 3.1 கி.மீ பாலம் இதற்கு முன் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 27, கடந்த ஆண்டு ஜூன் 4 ஆகிய தேதிகளில் இரண்டு முறை இடிந்து விழுந்தது. இரண்டு நிகழ்வுகளிலும், பாலத்தின் மேற்கட்டுமானம் கீழே உள்ள ஆற்றில் விழுந்தது. குறிப்பிடத்தக்க வகையில், பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் நிதிஷ் குமார் அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 15 பொறியாளர்களை இடைநீக்கம் செய்தது. நிதிஷ் குமார் அரசின் முதன்மைத் திட்டமாகக் கருதப்படும் அகுவானி-சுல்தங்கஞ்ச் பாலம், மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மீண்டும் இடிந்து விழுந்த கங்கை நதி பாலம்
1 mins read
இடிந்து விழுந்த கங்கை ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் - படம்: இந்திய ஊடகம்
குறிப்புச் சொற்கள்

