ஆளுநர் முடிவு சட்டவிரோதம்: சித்தராமையா

ஆளுநர் முடிவு சட்டவிரோதம்: சித்தராமையா

2 mins read
2c535f62-33ca-46ae-b5ae-79f2ab4c2928
கர்நாடக முதல்வர் சித்தராமையா. - படம்: தமிழக ஊடகம்

பெங்களூரு: ‘‘ கர்நாடக ஆளுநரின் முடிவு சட்டவிரோதமானது’‘ என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

நில மோசடி வழக்கு ஒன்றில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார்.

இதன் தொடர்பில் கண்டனம் தெரிவித்த சித்தராமையா: ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன். பதவி விலகும் அளவுக்கு நான் தவறேதும் செய்யவில்லை. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக அரசை கவிழ்க்க பா.ஜவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் சதி செய்கின்றன.

முதல்வர் பதவியிலிருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. என் மீதும், குடும்பத்தினர் மீதும் தொடரப்பட்ட வழக்குகள், தொடரும் பிரச்சினைகளை சட்டப்படி எதிர்கொள்வேன்.

காங்கிரஸ் மேலிடம், அமைச்சரவை, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி அளித்திருந்தார்.

கர்நாடகாவில் தற்போது முதல்வர் சித்தராமையாவும் மூடா (MUDA) எனப்படும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில், அவரது மனைவிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கியது தெரியவந்தது. இது தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் சித்தராமையா, தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே, அந்த மனைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சட்டசபையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில், மைசூரில் பேரணியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பிரதீப் குமார், டி.ஜே. ஆப்ரகாம் மற்றும் ஸ்னேகமயி கிருஷ்ணா ஆகியோர், மூடா முறைகேட்டில் ஈடுபட்ட முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என எம்.பி, எம்.எல். ஏக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டிருந்தார். தற்பொழுது, மூடா முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின் இந்தச் செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்