புதுடெல்லி: பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடும் அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன என உலகளாவிய தெற்கு நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.
உலகளாவிய தெற்கு நாடுகளின் உச்சநிலை மாநாட்டின் மூன்றாவது சந்திப்பை இந்தியாவின் ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருப்பொருளில் இந்தியா இணையவழியில் நடத்தியது.
இதில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி, “உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் குரல் வளர்ச்சி தொடர்புடைய பிரச்சினைகளை விவாதிக்க ஒரு தளமாக மாறியுள்ளது. நம்மைச் சுற்றி நிச்சயமற்ற சூழல் நிலவும் நேரத்தில் இன்று நாம் கூடியுள்ளோம். ஒருபுறம், கொவிட் பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. மறுபுறம், போர் சூழ்நிலை நமது வளர்ச்சிப் பயணத்தில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் சவால்கள் மட்டும் நம் கண்முன் இல்லை. சுகாதார பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றின் சவால்களையும் நாம் கண்டுவருகிறோம்.
பொருளாதார சவால்கள், சமூகம் எதிர்கொள்ளும் தொழில்நுட்பம் சார்ந்த அதிகரித்த சவால்களையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு கடுமையான அச்சுறுத்தலாக விளங்குகிறது. நாம் ஒன்றிணைந்தால்தான் நமக்கு பலம். அது உலகளாவிய தெற்கு நாடுகள் புதிய பாதையை நோக்கிச் செல்ல வழிவகுக்கும்.
உலகளாவிய நிர்வாகத்தை கையாள்வதற்காக முந்தைய நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களால், இந்த நூற்றாண்டின் சவால்களை சமாளிக்க முடியவில்லை. இந்தியாவின் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை அனைத்துலக ரீதியில் தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று திரு மோடி தெரிவித்தார்.
இந்த உச்சிநிலை மாநாட்டில் பங்ளாதேஷ், பூட்டான், நேப்பால் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.