தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

12% இந்திய மசாலாப் பொருள்கள் தரமற்றவை: சோதனையில் தெரிந்தது

2 mins read
f4cd7302-443f-4b0f-9da2-c29c4e1cba6b
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் US$4.46 பில்லியன் என்னும் சாதனை அளவில் மசாலாப் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: மசாலாப் பொருள்களின் மாதிரிகளை இந்தியாவின் அரசாங்க அமைப்பு சோதித்ததில் ஏறக்குறைய 12 விழுக்காட்டுப் பொருள்கள் தரம் மற்றும் பாதுகாப்புக்கான தரநிலையை எட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.

எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் மசாலாப் பொருள்களில் ‘எத்தலீன் ஆக்சைட்’ என்னும் பூச்சிக்கொல்லி இருப்பதாக, கடந்த ஏப்ரல் மாதம் ஹாங்காங் உணவுப் பாதுகாப்பு மையம் (சிஎப்எஸ்) தெரிவித்தது. அந்த நிறுவனங்களின் மசாலாப் பொருள்களை வாங்கவும் விற்கவும் அங்குத் தடைவிதிக்கப்பட்டது.

குறிப்பாக, எம்டிஎச் மெட்ராஸ் குழம்புப் பொடி, எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா, எம்டிஎச் சாம்பார் மசாலா ஆகியவற்றை வர்த்தகர்கள் விற்க வேண்டாம் என சிஎப்எஸ் கேட்டுக்கொண்டது.

பிரிட்டனும் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மசாலாப் பொருள்கள் மீதான கட்டுப்பாட்டைக் கடுமையாக்கியது. அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றவை குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள்மீது தீவிர கவனம் செலுத்தப் போவதாகக் கூறின.

இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருள் தயாரிப்பு இடங்களுக்குச் சென்று சோதனை நடத்தி மாதிரிகளைச் சேகரித்தது. பின்னர், அந்த மாதிரிகளை அது சோதனை செய்யத் தொடங்கியது.

மே மாதம் முதல் ஜூலை மாதத் தொடக்கம் வரை 4,054 மாதிரிகளை ஆணையம் சேகரித்து, சோதித்ததில் அவற்றில் 474 மாதிரிகள் அல்லது 12 விழுக்காடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலையை எட்டவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இந்த விவரங்களை, இந்தியாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் திரட்டியது. அது தொடர்பாக, ஆணையத்திடம் அந்தச் செய்தி நிறுவனம் விவரங்களைக் கேட்டது.

அது தொடர்பாக அறிக்கை ஒன்றை ஆணையம் அனுப்பி வைத்தது. இருப்பினும், தரநிலையை எந்த நிறுவனங்களின் மசாலாப் பொருள்கள் எட்டவில்லை என்பதை அறிக்கை குறிப்பிடவில்லை.

ஆனால், தரக்குறைவான மசாலாப் பொருள்களை விற்கும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக ஆணையம் அதில் கூறியுள்ளது.

தங்களது மசாலாப் பொருள்கள் பாதுகாப்பானவை என்று எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்கள் தொடக்கம் முதலே கூறி வருகின்றன.

உலகளவில் மசாலாப் பொருள்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. 2022-23 நிதி ஆண்டில் S$422 மில்லியனுக்கும் அதிகமான மசாலாப் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

2022ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் உள்ளூர் மசாலாப் பொருள் சந்தையின் மதிப்பு US$10.44 பில்லியன் (S$13.76 பில்லியன்) என ஸியோன் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் கூறியது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் $4.46 பில்லியன் டாலர் என்னும் சாதனை அளவில் மசாலாப் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்தது.

குறிப்புச் சொற்கள்