தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடகு நகைகளுடன் மாயமான வங்கி மேலாளர் அண்டை மாநிலத்தில் பிடிபட்டார்

1 mins read
4b08bf95-6216-4107-b2e9-fad636a80b4a
25 கிலோ நகைகளுடன் தலைமறைவானதாகக் கூறப்படும் மது ஜெயகுமார், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். - படம்: இந்திய ஊடகம்

கோழிக்கோடு: அடகு வைக்கப்பட்டிருந்த 25 கிலோ தங்க நகைகளுடன் தலைமறைவானதாகச் சந்தேகிக்கப்படும் வங்கி மேலாளர் கைதுசெய்யப்பட்டார்.

இந்தியாவின் கேரள மாநிலம், வடகரையிலுள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் பணியாற்றிவந்த மது ஜெயகுமார், தெலுங்கானா மாநிலத்தில் பிடிபட்டார்.

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த மது ஜெயகுமாரை கேரளத்திற்குக் கொண்டுவருவதற்காக வடகரைக் காவல்துறையினர் தெலுங்கானா விரைந்துள்ளனர்.

உண்மையான நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை வைத்துவிட்டு ஜெயகுமார் 25 கிலோ நகைகளுடன் மாயமானதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் அண்மையில்தான் வடகரை வங்கிக் கிளையிலிருந்து கொச்சி வங்கிக் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவர் கொச்சிக்குச் சென்று பணியில் சேரவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வடகரைக் கிளையின் இப்போதைய மேலாளார் இர்ஷாத் அளித்த புகாரின் அடிப்படையில் வடகரைக் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

இதனிடையே, இருநாள்களுக்குமுன் இணையத்தில் காணொளிமூலம் தலைகாட்டிய ஜெயகுமார், மண்டல மேலாளர் அருண்மீது குற்றஞ்சாட்டினார். ஆயினும், வங்கியிலிருந்து திருடியதாகக் கூறப்படும் தங்க நகைகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

அடையாளம் தெரியாத மனிதர்களின் பெயரில் சத்தம்கண்டத்தில் நிதி நிறுவனத்திற்கு விவசாயத் தங்க நகைக் கடன் வழங்கும்படி மண்டல மேலாளர் அருண் தன்னைக் கட்டாயப்படுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்